கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

யன்னல் எழுத்தாளர் சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலைக் குறித்து தேடிச்சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்றுப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்கூற்றுக் கிரை என பின் மாயும் பல வேடிக்கை மனிதர்களால் உருவாக்கப்பட்டது நாம் வாழும் இந்தச் சமூகம். இக்கட்டமைப்பிற்குள் இயந்திரகதியில் வாழ்ந்திறக்க நாம் பணிக்கப்பட்டிருக்கின்றோம். இதில் ஏதொரு குளறுபடியும் நேராமல் இருக்கப்பார்த்துக்கொள்ள அது அம்மனிதர்களையே நியமித்திருக்கின்றது. இந்த இயந்திரகதிக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள- மனிதர்களைப் பழக்கப்படுத்த வேண்டியதை சமூகம் தனது முழுமுதற் கடமையாக பாவிக்கின்றது. இதற்கு வகையாக, மனிதர்களை வகைப்பிரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அதற்கு அவசியமாகிறது. இதன்படி நோக்குகையில் மனிதன் ஒரு உயிரினம் என்பதைத் தாண்டி ஏற்படுத்தப்பட்ட அனைத்துமே சமூகக் கட்டமைப்பின் கற்பிதங்களே ஆகும். சாதி-மதம்-நிறம்- மொழி-நாடு எனப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு - உண்டுறங்கி இடர் செய்து செத்திட...