சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் பிரக்ஞை

கி. தினேஷ் கண்ணன்

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் குறித்தான பார்வை 




நிகழ்வுகள் அசைவு முள் உணர்த்தும் திசை நோக்கி வாழ்வு நகர்கிறது. புறவுலகைப் புலன்களினால் அகத்தீட்டலின் வகைவகையால் பருப்பொருளைைத் துய்த்துணரும்- வாழ்ந்திறக்கும் மனிதர்களின் அகக்கூறுகளில் கருக்கொள்ளும் வினையூக்கத்தால் வெளிப்படும் செயல்களின் பின்னலான நிகழ்வுகளின் உட்கிடையாக உள்ள புதிர்த்தன்மையை முன்முயற்சிகளின்றி சிரமக்கிரமங்களின்றி கருத்தமைதியோடு சொல்லி நிற்பவையே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். 


சமூகம் என்னும் வடிவ மயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் மனோவிகாரங்களை, செயலசைவுகளை சிலந்தி வலையின் பின்னல் வடிவம்போலக் கொண்டு உருவாகும் நிகழ்வுகள் வாழ்வை நிறைக்கின்றன. 

அந்த நிகழ்வுகள் வாழ்வின் புதிர்ச்சிக்கலால் ஆனது. அதற்கான அர்த்தம் அப்பின்னல் வலையின் ஏதோவொரு இழையில் இருக்கலாம். அவ்விழையே அவ்வலையின் அர்த்தமாக இருப்பினும் அது முன்னிலையாகவன்றி அதன் பின்னோட்டமாகவே அம்மொத்த வலைக்குமான புதிர்த்தன்மையை உணர்த்தி நிற்கும். 

அத்தன்மைகளின் அருவமான இருப்பு, இக்கதைகளின் சாரங்களாகும். அந்த இருப்பைக் கேள்வி கேட்பதோ அல்லது அந்த இருப்பிற்கான பதிலைக் கூற முயல்வதோ இக்கதைகளின் நோக்கமல்ல. 

இன்னும் சொல்லப்போனால்

அக் கேட்கப்படாத கேள்விகளுக்கும் சொல்லப்படாத பதில்களுக்கும் இடையேயான காந்த சக்தியின்- ஈர்ப்பு விசையின் அதிர்வை உணரச் செய்வதே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள். 

விதந்தோதப்படும் விவரனைகள் ஏதுமற்ற சிதறுண்ட மையத்தின் அர்த்தப்பாடுகளை இணைத்துணரும் கருத்தியக்கத்தை நம்மிடமே இக்கதைகள் விட்டுவிடுகின்றன.

வாழ்வின் நிகழ்வுகளின் ஒட்டுமொத்த இயக்கத்தின் வெகு சாதாரணமான நுண்ணிய அசைவிலும் இப்புதிர்த்தன்மை ஊடுபாக உள்ளது. 

வாழ்க்கைக்கான அர்த்தத்தை எப்படி கண்டுணர இயலாதிருக்கிறதோ அதுபோலவேதான் இவ்வியக்கத்தின் நிகழ்வுகளின் அர்த்தமும், அர்த்தம்மின்மை எனும் முகமூடிக்குள் தன்னை ஒளித்துக்கொண்டுள்ளது. அதைக் கண்டடையவியலாவிடினும் குறைந்தபட்சம் அதன் இருப்பின் பிரக்ஞையை நாம் அறிந்திருக்க இக்கதைகள் துணைசெய்கின்றன.

 நாமே நிதர்சனத்தின் மூலம் பலமுறை உணரும் இவ்விருப்பை புனைவின் மூலமாக அச்சாதாரண விஷயத்தின் மாயத்தன்மையை தன்னுணர்வின்றியே நம்முள் ஏற்படுத்துகின்றன.

வெகு சாதாரணமாக நமக்கு நடந்திருக்கக்கூடிய; நடக்காமலாகிவிட்ட நம் சிறு செய்கையினால் - சிறு முடிவினால் தடம் மாறியோ - இடம் மாறியோ சென்று நகரும் நமது வாழ்வுப் பயணத்தில் நாம் அதன் போக்கில் பயணப்படும்பொழுது காணும்; உணரும்; புரிந்து கொள்ளும்; புரியாது விழிக்கும் அப்புதிர்த்தன்மையான நிதர்சனத்தை இக்கதைகள் நினைவூட்டுகின்றன. 

எதார்த்தத்தை அழுத்தும் கற்பித்தங்களை, மனித இயல்பை மாற்றும் அடக்குமுறைகளின் அபத்தத்தைக் கூறும் வேளைகளிலும் இக்கதைகள் தனக்குள்ளான இயல்பின் எதார்த்தத்தை விட்டு விலகாது கருத்தமைதியோடு அவற்றை பதிவு செய்கின்றன. 

கட்டமைப்புகளின்; அளவீடுகளின் சட்டத்தில் இறுகப் பொருத்தப்பட்டவனாக மனிதன் திணறிக் கொண்டிருக்கிறான். தொடக்கத்திலிருந்தே வழிநடத்தப்படுபவனாக, மனிதன் தன் சுயத்தைக் கட்டமைக்க வேண்டிய தீவிரத்தைக் கண்டுணராதாவனாகவே வாழ நேரிடுகின்றது. இவ்வாறு மனிதனைச் சிறைப்படுத்தும் சமூகம் அதற்கான நியாயங்களைக் கற்பித்துக் கொள்கிறது. எனவே உண்மையான மனித இயல்பாக இருக்க வேண்டியவை மந்தமாக்கப்படுகின்றன. போலி பரிதாபத்தின் மூலமும் பச்சாதாபத்தின் மூலமும் தன்னை; தன் இயல்பைத் திருப்திப்படுத்திக் கொள்ளவும் மனிதனை வழிநடத்துகிறது சமூகம். 

எந்தவிதமான அளவுகோல்களும் மதிப்பீடுகளும் அடக்குமுறையேயாகும். கலையின் ஒட்டுமொத்தமான நோக்கமே மனிதனின் அத்தனை உண்மையான இயல்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் தன்னுணர்வோடு சிந்திக்கவும் செய்வதேயாகும். அக் கலாபூர்வமான பிரக்ஞையை உட்கிடையாகக் கொண்டு, மனிதனின் மனோவிகாரங்களை; செயற்சலனங்களை   நிகழ்வுகளின் நிகழ்த்துதன்மையில், செயல் நோக்கங்கொண்டோ தன்னுணர்வின்றியோ நிகழும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் நிற்சலனமான தியான நிலைக்கு இட்டுச் செல்கின்றது. 



சுரேஷ்குமார இந்திரஜிதின் நூல்களின் பட்டியல்

சிறுகதை தொகுப்புகள்
  • அலையும் சிறகுகள்
  • மறைந்து திரியும் கிழவன்
  • மாபெரும் சூதாட்டம்
  • அவரவர் வழி
  • நானும் ஒருவன்
  • நடன மங்கை
  • நள்ளிரவில் சூரியன்
  • பின்நவீனத்துவவாதியின் மனைவி
  • பின்னணிப் பாடகர்
  • இடப்பக்க மூக்குத்தி
  • ஒரு பெண் ஒரு சிறுவன் - இரண்டு கதைகள்

நாவல்கள்
  • கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
  • அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
  • ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி

Comments

Popular posts from this blog

SOCIAL INCLINATION OF HUMAN PSYCHE - AN ANALYSIS WITH FILMS

The Stage Play that Became a Film: Psychodynamics of K.Balachander's Major Chandrakanth (1966)

ப. சிங்காரம் - அர்த்தத்தைத் தேடும் தேடலின் அர்த்தம்